கோவை மண்டலத்தில் ஒரு வாரத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.40 கோடி வருமானம்
கோவை மண்டலத்தில் கடந்த ஒருவாரத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.40 கோடிக்கு வருமானம் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை துணைத்தலைவர் ஜெகதீசன் கூறினார்.
கோவை,
கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத்தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:-
பத்திரப்பதிவு
கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய 5 வருமானம் மாவட்டங்களாக பத்திரப்பதிவுத்துறை பிரிக்கப்பட்டு 56 சார்பதிவு அலுவலகங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டு இருந்தது.
20-ந் தேதி முதல் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக மண்டல அளவில் மாதந்தோறும் ரூ.150 கோடி அளவுக்கு பத்திரப்பதிவு மூலம் வருமானம் கிடைக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30,325 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.131.72 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது.
ரூ.40 கோடி வருமானம்
பிப்ரவரி மாதம் 36,877 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.174.47 கோடிக்கும், மார்ச் மாதம் 32,974 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.149.13 கோடிக்கும் வருமானம் கிடைத்தது. ஆனால் ஏப்ரல் மாம் ஊரடங்கு காரணமாக 187 பத்திரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடி அளவுக்குதான் வருமானம் கிடைத்தது. மே மாதம் நிலைமை சற்று பரவாயில்லாமல் இருந்தது. 13,032 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.50 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்தது. இந்த மாதம் நேற்று வரை ஒருவாரத்துக்குள் 8,830 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.40 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது.
கிருமி நாசினி
ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு வருமானம் கிடைத்து இருப்பதால் வரும் வாரங்களில் மேலும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சகஜநிலை திரும்பி வருகிறது. பத்திரப்பதிவு முத்திரை கட்டணமாக 7 சதவீதமும், பதிவு கட்டணமாக 4 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. அனைத்து சார்ப்பதிவு அலுவலகங்களிலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி முறையாக பின்பற்றவும், முகக்கவசம் அணியாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமே அனைத்து பத்திரப்பதிவும் நடைபெறுவதால் இடைத்தரகர் மற்றும் போலி ஆவணங்கள் பதிவு ஆகியவை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story