குடியிருப்பு பகுதி முழுவதும் அடைக்கப்படாது: கொரோனா தொற்று பாதித்தவரின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்படும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


குடியிருப்பு பகுதி முழுவதும் அடைக்கப்படாது:  கொரோனா தொற்று பாதித்தவரின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்படும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2020 10:04 PM GMT (Updated: 9 Jun 2020 10:04 PM GMT)

கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர் இருக்கும் குடியிருப்பு பகுதி முழுவதும் அடைக்கப்படாமல் அந்த நபர் இருக்கும் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாநகரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை உள்பட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. சிலர் கோவை மாவட்ட எல்லை வரை வந்து, உறவினர்களின் இருசக்கர வாகனங்கள் மூலம் உள்ளே வந்து விடுகிறார்கள்.

அதிகாரிகள் உள்பட யாரிடமும் அவர்கள் சொல்வதில்லை. இதன்மூலமும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்தநிலையில் சாய்பாபாகாலனி வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர், ராமநாதபுரம் ஒலம்பஸ் போலீஸ் கந்தசாமி வீதியில் உள்ள ஒருவர், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் பலர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவி வரும் நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தனிமைப்படுத்தப்படும்

கொரோனா தொற்று பாதித்தவர்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொது மக்களின் நடமாட்டத்துக்கு முன்பு தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது சம்பந்தப்பட்டவர் வசிக்கும் வீடு மட்டும் தனிமைப்படுத்தப் பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

அதன்படி தொற்று உள்ள வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தாமாகவே முன் வந்து பரிசோதனைக்கு அனுமதித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story