வாகன கடன்களை செலுத்த முடியாமல் அவதி: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பிச்சை எடுக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு


வாகன கடன்களை செலுத்த முடியாமல் அவதி:  சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  பிச்சை எடுக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Jun 2020 3:48 AM IST (Updated: 10 Jun 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வாகன கடன்களை அடைக்க முடியாததால் பிச்சை எடுத்து செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஏ.எம். ரபீக் தலைமை தாங்கினார்.

இதில் திரளான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிஐ.டி.யு. நிர்வாகிகள் கூறியதாவது:-

வாகன கடன்

அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2021-ம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. வாகனத்திற்கான தரச் சான்றிதழை பெறுவதற்கு, வாகனங்களில் பொருத்தியுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் தரச்சான்றிதழை வழங்க வேண்டும். நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும், கொரோனா வைரஸ் காலத்தில் நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் அனைத்து ஓட்டுனர்களுக்கும் மார்ச் முதல் மே மாதத்திற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிச்சை எடுக்க அனுமதி

வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது என மோட்டார் வாகன சட்ட விதி இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடியும் வரை வாகனங்களுக்கான பர்மிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுனர்களுக்கு 10 லட்ச ரூபாயும், எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாயையும் உடனடியாக அரசு வழங்கக்கோரிக்கை விடுத்ததுடன், அனைத்து வாகன கடன்களையும் செலுத்த, பிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டி கலெக்டர் ராஜாமணியை சந்தித்து அவர்கள் மனுவும் கொடுத்தனர்.

Next Story