வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழிலுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழிலுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2020 10:46 PM GMT (Updated: 9 Jun 2020 10:46 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழிலுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்(யு.ஒய்.ஈ.ஜி.பி.), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்(நீட்ஸ்), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்(பி.எம்.இ.ஜி.பி.) ஆகிய திட்டங்கள் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2020-21-ம் நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்துக்கு யு.ஒய்.ஈ.ஜி.பி. திட்டத்தின் கீழ் 65 தொழில் திட்டங்களுக்கு ரூ.45 லட்சமும், நீட்ஸ் திட்டத்தின் கீழ் 13 தொழில் திட்டங்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சமும், பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் 28 தொழில் திட்டங்களுக்கு ரூ.85 லட்சமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இணையவழி பயிற்சி

இந்த திட்டங்களின் கீழ் தொழில்முனைவோர் விரைவில் தொழில் தொடங்கும் வகையில் மாவட்ட தேர்வுக்குழு மூலமாக நடக்கும் நேர்முக தேர்வில் இருந்தும், தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சியில் இருந்தும் மாநில அரசு விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்து உள்ளது.

மத்திய அரசின் தொழில் முனைவோர் பயிற்சியினை இணையவழி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டங்களின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து புதிய தொழிலுக்கு கடன் பெற்று பயன்பெறலாம்.

25 சதவீத மானியம்

யு.ஒய்.ஈ.ஜி.பி. திட்டத்துக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் தகுதியானவர்கள். நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை மற்றும் வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியம்(அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை) வழங்கப்படும். தொழில் முனைவோர் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story