மாவட்ட செய்திகள்

முதுமலை சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் + "||" + Mudumalai roads Monkeys waiting for food

முதுமலை சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்

முதுமலை சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்
முதுமலை சாலையோரங்களில் உணவுக்காக குரங்குகள் காத்திருக்கின்றன.
கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு உள்ளது. இங்கு காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், குரங்குகள், மான்கள், புலிகள் உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் முதுமலையை சுற்றி பார்க்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்போது சாலையோரங்களில் உலா வரும் குரங்குகள், மான்கள், மயில்கள் போன்றவைகளுக்கு உணவு பொருட்களை கொடுத்து வந்தனர். ஆனால் வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதையும் மீறி சுற்றுலா பயணிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

உணவுக்காக காத்திருக்கும் வனவிலங்குகள்

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரிக்குள் சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. ஆனால் உணவுக்காக சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து, முதுமலை மற்றும் கூடலூர் சாலையோரங்களில் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காத்திருப்பதை காண முடிகிறது. வனத்துறையினரின் தடையை மீறி மனிதர்கள் உண்ணும் உணவு பொருட்களை கொடுத்து பழக்கியதால், அதை எதிர்பார்த்து வனவிலங்குகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளதாக வன ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

விபத்தில் சிக்கும் அபாயம்

இது தவிர முதுமலை சாலைகளின் வழியாக சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதை கண்டதும் உணவு கிடைக்குமா? என்று அந்த வாகனங்களின் அருகில் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஓடி வருகின்றன. அப்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் காணப்படுகிறது. சில நேரங்களில் அந்த வாகனங்களில் குரங்குகள் ஏறி உணவு தேடி டிரைவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வனவிலங்குகள் இயல்பாகவே வனப்பகுதிக்குள் உணவு தேடி கொள்ளும் குணமுடையவை. அவைகளுக்கு நாம் உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வனவிலங்குகளை தங்கள் அருகில் வர வைப்பதற்காக சுற்றுலா பயணிகள் உணவுகளை கொடுத்து பழக்கிவிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் வராத நேரங்களிலும், அவர்களை எதிர்பார்த்து குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காத்து கிடக்கின்றன. இதனால் அவைகளுக்குதான் பாதிப்பு ஏற்படும். எனவே இனிமேலாவது இதுபோன்ற செயலில் சுற்றுலா பயணிகள் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகம் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
2. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
3. பரவலாக பெய்த கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ அபாயம் குறைந்தது - வனத்துறையினர் தகவல்
பரவலாக பெய்த கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ அபாயம் குறைந்து விட்டது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.