சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை; தாய் தற்கொலை முயற்சி கணவர் கைது


சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொலை; தாய் தற்கொலை முயற்சி கணவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 5:56 AM IST (Updated: 10 Jun 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே குடும்ப தகராறில் விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 34). இவருக்கும் ஆனைமலையன்பட்டியை சேர்ந்த பவித்ரா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்னிஷ் (6), லக்‌ஷன் (1½) என 2 மகன்கள் இருந்தனர்.

பிரபு திராட்சை விவசாயி. இவர் லாரி டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

2 குழந்தைகள் கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பவித்ராவும், அவருடைய 2 குழந்தைகளும் மட்டும் இருந்தனர். பிரபு வெளியே சென்றிருந்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பவித்ரா மனதை கல்லாக்கி கொண்டு தனது 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் விஷம் குடித்தார்.

பின்பு அவர் தனது உறவினர் ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்த விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போது 2 குழந்தைகளும் இறந்து கிடந்தன. பவித்ரா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் உறவினர் செந்தில் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த பவித்ராவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய கணவரின் தொந்தரவால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அவருடைய கணவர் பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிகார கணவருடன் ஏற்பட்ட தகராறில் தான் பெற்ற 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று, தாயும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story