எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து ; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக நாராயணசாமி அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து ; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 6:12 AM IST (Updated: 10 Jun 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில், ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த பிளஸ்-1 பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மட்டும் மார்ச் 24-ந் தேதி வரை நடைபெற்றன.

மார்ச் 26-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வும், மார்ச் 27-ந் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வும் மாணவர்கள் நலன்கருதி தள்ளிவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்பிறகு தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேதிகள் இரு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக, ஜூன் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசத்துடன் ‘ஹால் டிக்கெட்‘ வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த நிலையில், கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தேர்வை நடத்த வேண்டாம் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நேற்று காலை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தினார்.

அப்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்வது என்றும், அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும், நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன பாடங்களுக்கான (புதிய பாடத் திட்டத்தில் வேதியியல் கணக்கு பதிவியல், புவியியல், பழைய பாடத் திட்டத்தில் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல்) தேர்வுகளை வருகிற 15-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், இந்த தேர்வுகளை தள்ளிவைப்பது பற்றி அரசு பரிசீலிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளது. அரசு இதுதொடர்பாக விரிவாக ஆய்வு செய்தது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்று வல்லுனர்கள், நோய்த்தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பு இல்லை என கருத்து தெரிவித்து உள்ளனர்.

எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய்த்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய்த்தொற்றில் இருந்து காக்க, வருகிற 15-ந் தேதி முதல் நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், பிளஸ்-1 வகுப்புக்கு நடைபெற இருந்த விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

பிளஸ்-2 வகுப்பு தேர்வை பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்பட இருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப பிளஸ்-2 வகுப்பு மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவைக்கு தனி கல்வி வாரியம் கிடையாது என்பதால் தமிழகத்தின் கல்வி வாரியத்தை புதுவை அரசு பின்பற்றி வருகிறது. எனவே தமிழகத்தை பின்தொடர்ந்து புதுவையிலும் மாணவர்கள் நலன் கருதி கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைப் போல் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், பள்ளிக்கு வருகை தந்ததன் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

பிளஸ்-1 வகுப்பிற்கு ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. அந்த தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது போலவே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்களிடம் கலந்துபேசி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இதில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story