அரூர் வனப்பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


அரூர் வனப்பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2020 1:56 AM GMT (Updated: 2020-06-10T07:26:01+05:30)

அரூரில் திருமணத்தை பெற்றோர் தள்ளி வைத்ததால் விரக்தி அடைந்த காதல் ஜோடி வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ஆனந்தராஜ் (வயது 22). பெயிண்டர். அதேபகுதியை சேர்ந்தவர் சவுரிநாதன். இவருடைய மகள் சோபியா (21). உறவினர்களான இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அவர்கள், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித் துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் காதலர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றனர். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது பெற்றோர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள தண்டகுப்பம் காப்புக்காடு வனப்பகுதியில் காதலர்கள் 2 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் விஷபாட்டில் கிடந்தது. இதனால் காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கமலநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை பெற்றோர் தள்ளி வைத்ததால் விரக்தி அடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story