நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 2:48 AM GMT (Updated: 2020-06-10T08:18:31+05:30)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


நாமக்கல்,

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குழந்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் தம்பிராஜா முன்னிலை வகித்தார். இதில் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர்கள் மணிமாறன் (இந்திய கம்யூனிஸ்டு), சண்முகம் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ராசிபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு வெண்ணந்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினர் மீனா, நகர பொருளாளர் சலீம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் தலைமை தாங்கினார். ராயப்பன், ஆதிநாராயணன், செல்வராஜ், கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story