எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து மகிழ்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது மாணவ-மாணவிகள் கருத்து


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து மகிழ்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது மாணவ-மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 10 Jun 2020 8:40 AM IST (Updated: 10 Jun 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து மகிழ்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து மகிழ்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் எதிரொலியாக தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து மாணவ-மாணவிகளின் மனநிலை என்ன? என்பது பற்றி சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

உயிர் முக்கியம்

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி மாணவர் அஸ்வின் பாலாஜி:- முதன் முதலாக, அரசு பொது தேர்வினை எழுதக்கூடிய வாய்ப்பு கொரோனாவால் பறிபோய் விட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பிளஸ்-1 தேர்வில் நல்ல குரூப்பில் சேரவேண்டும் என்பதற்காக 9 மாதங்களாக கடுமையாக முயற்சி எடுத்து படித்தேன். இருந்தாலும், மாணவர்களின் நலன்கருதி பொது தேர்வினை ரத்து செய்ததோடு மட்டும் இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

திருச்சி அய்யப்பநகரை சேர்ந்த பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி மாணவி அட்சயா:- கொரோனா நமது நாட்டை மட்டும் மிரட்டவில்லை. உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. படிப்பா, உயிரா என்ற கேள்வி எழுந்தபோது உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு இந்த முடிவினை எடுத்து உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வினை நன்றாக எழுதி அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று சாதனை படைக்கவேண்டும் என்பதற்காக ஆண்டு முழுவதும் கவனம் செலுத்தி படித்து வந்த எங்களுக்கு தேர்வு ரத்து என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தான் உள்ளது. இருந்தாலும் அரசின் முடிவை ஏற்று தானே ஆகவேண்டும்.

உழைப்பு வீணாகிவிட்டது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் நாயகனைபிரியாள் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சிவகுருநாதன்:- 10-ம் வகுப்பு தேர்வு நடத்தாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளார்கள். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை காட்டிலும், பொதுத்தேர்வுக்கு கூடுதல் அக்கறையோடு படித்தேன். தேர்வு எழுதினால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பேன். தேர்வு நடத்தப்படாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அரையாண்டு தேர்வு முடிவில் தேர்வுகளை அணுகும் போது நான் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள ஆலோசனைகள் கொடுத்தனர். நானும் கடினமாக முயற்சி செய்தேன். இப்போது அத்தனை முயற்சி எடுத்து படித்ததும் வீணாகிவிட்டது.

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி:- எல்லோரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். நன்றாக தேர்வுக்கு தயாராகி இருந்தேன். காலாண்டு, அரையாண்டு தேர்வை விட கூடுதல் கவனம் கொண்டு படித்தேன். என்னை தேர்வுக்கு தயார் செய்த என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிவிட்டது. ஒவ்வொரு முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டபோதும், தேர்வுக்கு தயாராக எனக்கு கூடுதல் அவகாசம் கிடைத்தது. தேர்வு நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. 3 மாதங்கள் வீட்டில் இருந்து படித்தபோது கூட மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்கள் உழைப்பின் உண்மையான பலனை அடையமுடியாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.

மகிழ்ச்சி

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி:- அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது என் போன்ற மாணவிகளுக்கு சற்று ஏமாற்றமாக இருப்பினும், கொரோனா பாதிப்பு நெருக்கடியான இந்த நேரத்தில் மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு எடுத்துள்ள சரியான முடிவிற்கு கட்டுப்படுகிறோம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் நான் அனைத்து பாடங்களையும் பலமுறை திருப்புதல் செய்து நினைவில் வைத்திருந்தேன். என்போன்ற மாணவிகள் தங்களது தனித்திறமையை நிரூபிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரசாந்த்:- தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது பாராட்டத்தக்கது. பொதுத்தேர்வின்போது மாணவர்கள்- பெற்றோர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கவும், கொரோனா சமூகப்பரவலை தடுக்கும் விதமாகவும், தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது எனக்கும், எனது பெற்றோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

புதுக்கோட்டை தனியார் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார்:- கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விகிதம் தான் சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. காலாண்டு தேர்வில் சற்று குறைவாகவே மதிப்பெண் எடுக்க முடிந்தது. அரையாண்டு தேர்வில் அதனை விட ஓரளவு அதிக மதிப்பெண் பெற்றேன். தற்போது பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம் என்று திட்டமிட்டு படித்திருந்தேன். ஆனால் தற்போது வழங்கப்படும் மதிப்பெண் விகிதத்தால் எனக்கு மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்து பிளஸ்-1 வகுப்பில் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது சிரமமாகும்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீ:- கொரோனா வைரசை நினைத்து அச்சப்பட்டு கொண்டிருந்த நாங்கள், எப்படி தேர்வெழுத போகிறோம் என்ற கவலையில் இருந்தோம். ஆனால் எங்களது நலனை கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ததோடு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், மதிப்பெண்கள் விகிதத்தையும் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த காலக்கட்டத்தில் தேர்வு தொடர்பாக பெரும் மன உளைச்சலில் இருந்த நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

ஏமாற்றம்

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு பெண்கள் பள்ளி மாணவி ச.சுவேதா:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முழு முயற்சி எடுத்து படித்து வந்தேன். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது சற்று மகிழ்ச்சி அளித்தாலும், முழு முயற்சியுடன் படித்தது வீணாகிப்போனதே என்று நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்ணை கணக்கிட்டால், மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. பதினொன்றாம் வகுப்பில் நினைத்த குரூப் கிடைக்குமா என்று தெரியவில்லை. மொத்தத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்தது மனவருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் கார்வேந்தன்:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தி இருந்தால் நல்ல மதிப்பெண் எடுத்து இருப்பேன். பழைய தேர்வு மதிப்பெண் சற்று குறைவாகத்தான் இருக்கும். தேர்வு பயத்தால் கொரோனா நாட்களில் டி.வி. கூட பார்க்காமல், அதிக நேரம் செலவழித்து படித்து வந்தேன். தற்போது பொதுத்தேர்வு இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு புறம் கவலை அளிக்கிறது.

Next Story