திருச்சி அருகே துணிகரம்: பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை
திருச்சி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி அருகே, ஜன்னல் கம்பிகளை அறுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைகள்-பணம் கொள்ளை
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 73). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு முருகேசன் மற்றும் அவரது மனைவி பத்மாவதி (65), மகன் ராஜேந்திரன் (40) ஆகியோர் வீட்டின் முன்பக்க அறையில் படுத்து தூங்கினர். நேற்று காலை முருகேசன் எழுந்து படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அறையின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டும், பீரோ திறந்தும் கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகள், மோதிரம், வளையல், நெக்லஸ் உள்பட 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது மணிபர்சில் இருந்த ஏ.டி.எம். கார்டுகள், பெட்ரோல் விற்பனை நிலைய சாவிகள், லாக்கர் சாவி உள்ளிட்டவைகளையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவு முருகேசன் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு அனைவரும் தூங்கியதை உறுதிபடுத்திக் கொண்டு ஜன்னல் கம்பிகளை நவீன கருவி மூலம் அறுத்து அதன் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர், அலமாரியில் இருந்த பீரோ சாவியை நைசாக எடுத்து பீரோவை திறந்து நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து விட்டு வந்த வழியாக தப்பிச் சென்றது தெரிய வந்தது. மேலும், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story