8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் போராட்டம்


8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 3:53 AM GMT (Updated: 10 Jun 2020 3:53 AM GMT)

சேலத்தில், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து சேலம், பூலாவரி, குப்பனூர், ராமலிங்கபுரம், நாழிக்கல்பட்டி, வட்டக்காடு உள்பட பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சேலம் எருமாபாளையம் பகுதியில் விவசாயிகள் சிலர் கால்நடைகளுடன் வயல்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்புக்கொடியை கையில் ஏந்தி 8 வழிச்சாலை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சேலம் உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

மேலும் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோருவது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 8 வழிச்சாலைக்காக போராடும் விவசாயிகள் மீது போடப்படும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர். 

Next Story