கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் ; 145 பேர் கைது


கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் ; 145 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 9:48 AM IST (Updated: 10 Jun 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த கம்யூனிஸ்டு கட்சியினர் 145 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி,

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 145 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயம், சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, மின் கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் முறையாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வட்ட செயலாளர் செண்பகவள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 60 பேரை கைதுசெய்து போலீஸ் வேன்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆகிய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் வேலு, கலியமூர்த்தி, நகர செயலாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் வேல்முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை சீனுவாசன், திருநாவலூர் ஜெயக்குமார், மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு தலா ரூ.7,500 மற்றும் மாநில அரசு ரூ.5,000 வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 32 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மணி, கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்தனர்.

Next Story