‘கவசாக்கி’ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 1½ வயது குழந்தை குணமடைந்தது கரூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
கரூர் அரசு மருத்துவமனையில் ‘கவசாக்கி‘ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 1½ வயது குழந்தை குணமடைந்தது.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் ‘கவசாக்கி‘ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 1½ வயது குழந்தை குணமடைந்தது.
அரியவகை நோய்
தாந்தோணிமலை, காந்திநகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி-கலா தம்பதியின் 1½ வயது குழந்தை ஹரீஸ். இந்த குழந்தைக்கு 6 நாட்களாக இடைவிடாத காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையை கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். தொடர் காய்ச்சலுடனும், உதடுகளில் வெடிப்புடனும், கை-கால்களில் வீக்கத்துடனும் காணப்பட்ட குழந்தைக்கு பரிசோதனை செய்ததில், ஈரல் பகுதியிலும் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சையளித்த குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார், குழந்தைக்கு ‘கவசாக்கி‘ நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தார்.
தொடர் பரிசோதனை
உடனடியாக குழந்தை நல இணைப்பேராசிரியர் கனிமொழி தலைமையில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, குழந்தைக்கு ரத்த பரிசோதனைகள் மற்றும் எக்கோ பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் கவசாக்கி நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கொரோனா தொற்று உள்ளதா என்பதும் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், இந்த நோய்க்கு உயிர் பாதுகாப்பு எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்கக்கூடிய ஐ.வி. இமினோ குளோபின் என்ற விலை உயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு, குளுக்கோஸ் மூலமாக சுமார் 16 மணிநேரம் அந்த குழந்தைக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக தற்போது ஹரீஸ் பூரண குணமடைந்துள்ளான்.
பாதிப்பு இருக்காது
இது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களின் தொடர் சாதனைகளில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. இந்த குழந்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் கண்காணிப்பட வேண்டும். பிறகு அவருக்கு வழங்கப்படும் மாத்திரையின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். இந்த குழந்தை வசிக்கும் பகுதியில் வேறு எந்த குழந்தைக்கும் இந்த நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை கரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story