காங்கேயம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தல் 2 வியாபாரிகள் கைது
காங்கேயம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய துணி வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 1000 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
முத்தூர்,
காங்கேயம் - திருப்பூர் சாலையில் சிவன்மலை தனியார் பள்ளி அருகில் காங்கேயம் போலீசார் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உள்ளே அமர்ந்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கீழே இறக்கி கிடுக்கிப்பிடி விசாரணை செய்து காரை தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது காரில் 50 சிறிய சாக்குகளில் கட்டப்பட்டிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது உள்ளே ரேஷன் அரிசி இருந்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து காரில் வந்த இருவரையும் விசாரணை மேற்கொண்டதில் கரூர் சின்ன ஆண்டான் கோவில் சாலை, திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 41) மற்றும் கரூர் காவேரி அம்மா தோப்பு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் வெங்கடேஷ் (42) என தெரிய வந்தது.
2 பேர் கைது
துணி வியாபாரிகளான இவர்கள் இருவரும் கரூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளில் நகர, கிராமப்பகுதிகளுக்கு காரில் சென்று ரேஷன் கடைகளில் பொதுமக்கள் இலவசமாக வாங்கி வைத்திருக்கும் அரிசியை குறைந்த விலைக்கு நேரில் வாங்கி சிறிய சாக்குகளில் மூட்டைகளாக கட்டி அதனை திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள உணவகங்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து காரில் இருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் காங்கேயம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story