கேரள பெண்ணை, நடுரோட்டில் திருமணம் செய்த என்ஜினீயர்
இ-பாஸ் பிரச்சினையால் தமிழக எல்லையில் நடுரோட்டில் கேரள பெண்ணை கோவையை சேர்ந்த என்ஜினீயர் திருமணம் செய்துகொண்டார்.
தளி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக திருமணம், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்த முடியாமல் தள்ளிவைக்கப்படுகின்றன. ஒருசிலர் எளிமையாக திருமணம் நடத்துகின்றனர்.
இதனால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கூட கலந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே கேரள-தமிழக எல்லையில் நடுரோட்டில் என்ஜினீயர் திருமணம் நடந்தது.
சிக்கல்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மாட்டுபட்டியை சேர்ந்த சேகர்-சாந்தா தம்பதியின் மகள் பிரியங்கா. இவருக்கும், தமிழ்நாடு கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மூர்த்தி-பாக்கியத்தாய் தம்பதியின் மகன் என்ஜினீயரான ராபின்சன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் திருமணம் நடத்தலாம் என்று பெற்றோர் எண்ணியிருந்தனர். ஆனால் அதிகரித்து வரும் வைரஸ் தாக்கம் மற்றும் நீடிக்கும் ஊரடங்கு காரணமாக திருமணத்தை முகூர்த்த நாளில் நடத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். ராபின்சன் வீட்டில் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்தனர். இதனால் மாட்டுப்பட்டியில் இருந்து கோவைக்கு செல்ல இ-பாஸ் கேட்டு மணமகளின் குடும்பத்தினர் விண்ணப்பம் செய்தனர். ஆனால் கேரளாவில் இருந்து கோவைக்கு செல்ல மணப்பெண்ணை தவிர அவரது பெற்றோர், உறவினர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.
மாநில எல்லையில்...
இதனால் தமிழக-கேரள எல்லையில் திருமணம் நடத்த மணமக்களின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ராபின்சன்-பிரியங்கா திருமணம் உடுமலை அருகே உள்ள சின்னாரில் நடைபெற்றது. அதுவும் சின்னாரில் உள்ள தமிழக-கேரள எல்லையில் நடு ரோட்டில் வைத்து திருமணம் எளிமையாக நடந்தது.
முன்னதாக மணமகன் வீட்டார் கோவையில் இருந்து கேரள-தமிழக எல்லைக்கு வந்தனர். அதேபோன்று மணமகள் வீட்டாரும் மாட்டுபட்டியில் இருந்து எல்லை பகுதிக்கு வந்தனர். அதன்பிறகு உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சி ததும்ப திருமணம் நடந்தது. இதில் 20 பேர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். முன்னதாக அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. திருமணத்திற்கு பின் மணமகளை, மணமகன் கோவைக்கு அழைத்து சென்றார்.
Related Tags :
Next Story