கொரோனா ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் வலம்வரும் பெற்றோர் தேவையின்றி அழைத்துவர வேண்டாம்; சுகாதார அதிகாரி வேண்டுகோள்
கொரோனா ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் பெற்றோர் வலம் வருகிறார்கள். அவர்களை தேவையின்றி அழைத்து வரவேண்டாம் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கோவையில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் விமானம் மற்றும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 25 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் காரணமாக கோவையில் சாய்பாபாகாலனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் கோவையில் பல இடங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வலம் வருகிறார்கள்.
பொதுமக்கள் அலட்சியம்
பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளி விட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தாலும் பொதுமக்கள் அவற்றை அலட்சியம் செய்வதாக கூறப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார், சுகாதாரத்துறையினர் விரட்டி விரட்டி அபராதம் விதித்து வருகின்றனர். அப்படியிருந்தும் கோவையின் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், கடைகளில் கும்பலாக நின்று பொருட்களை வாங்குவதும் அதிக அளவில் காண முடிகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பரவும் அபாயம்
கோவையில் கொரோனா தொற்றின் வீரியம் தெரியாமல் மக்கள் அலட்சியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசிய காரியங்களுக்காக வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தனி நபர் இடைவெளி கடைபிடிக்காமலும் உள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் நம் பக்கத்தில் உள்ளவருக்குத் தான் எந்த அறிகுறியும் இல்லையே என்று நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. அறிகுறி இல்லாதவர்களாலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தைகள்
எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அலுவலகங்கள் மற்றும் கடைகளில் உட்காரும்போது தனிநபர் இடைவெளி விட்டு அமர்ந்தால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். பல இடங்களில் பெற்றோர் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை கொரோனா தாக்காது என்று சொன்னாலும் குழந்தைகளை அது எளிதில் பாதித்து விடும். ஏனென்றால் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் தான் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த விபரீதத்தை கூட புரிந்து கொள்ளாத பல பெற்றோர் தங்கள் குழந்தைகளையும் இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு அழைத்து செல்கிறார்கள். இது ஆபத்தானது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்களை மருத்துவமனை தவிர வெளியே அழைத்து செல்லவேண்டாம்.
தடுக்க முடியும்
எனவே கடைகள், மார்க்கெட் போன்ற பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல், யாரிடமும் தொட்டு பேசாமல் இருத்தல் போன்றவற்றை பின்பற்றுவதின் மூலம் நோய் நம்மை தாக்குவதை தடுப்பது மட்டுமின்றி நோய் பரவலையும் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-
சீல் வைக்கப்படும்
பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தான் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சில கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதை காண முடிகிறது. இதை அந்தந்த கடைக்காரர்கள் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக கடைக்காரர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடைகளில் கூட்டம் சேர்ந்தால் அதற்கு கடைக்காரர்கள் தான் பொறுப்பு. இது தொடருமேயானால் விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story