சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் வந்த மணமகன் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை திருமணம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் வந்த மணமகன் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை திருமணம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2020 6:35 AM IST (Updated: 11 Jun 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல், கோவில்பட்டிக்கு காரில் வந்த மணமகன் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

கோவில்பட்டி, 

சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல், கோவில்பட்டிக்கு காரில் வந்த மணமகன் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தனியார் நிறுவன ஊழியர்

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 32 வயதான வாலிபர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக மணமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 6 பேர், சென்னையில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்கள், அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை.

அனுமதி மறுப்பு

நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனைச்சாவடியில் வந்தபோது, அங்கிருந்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல் வந்ததால், மணமகனின் குடும்பத்தினரை கோவில்பட்டிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சென்னைக்கு திரும்பி செல்வதாக கூறி சென்றனர். ஆனால், அவர்கள் மாற்றுப்பாதை வழியாக, கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றனர்.

திருமணம் நிறுத்தம்

இதனை அறிந்த அரசு அதிகாரிகள், ஆவல்நத்தத்துக்கு சென்று, மணமகன் உள்ளிட்ட 6 பேரையும் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைத்து தனிமைப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story