தொரப்பள்ளி அருகே ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி மும்முரம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு


தொரப்பள்ளி அருகே ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி மும்முரம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2020 7:15 AM IST (Updated: 11 Jun 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

தொரப்பள்ளி அருகே ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர்வயல் அருகில் தேன்வயல் கிராமம் உள்ளது. இங்கு 16 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆண்டுதோறும் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின்போது, கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து வந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் மாற்று இடம் வழங்கி, வீடுகள் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி தொரப்பள்ளி அருகே அம்பூர்வயலில் உள்ள 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 16 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. அந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் ஆதிவாசி மக்கள் பயன்படுத்தும் வகையில் சமையல் அறைகளை வெளிப்புறமாக கட்டும்படி உத்தரவிட்டார். மேலும் குடிநீர் கிணறு, சாலை அமைக்கும் பணியை தொடங்கும்படி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரனிடம் தெரிவித்தார்.

தொகுப்பு வீடுகள் கட்டும் பணி

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பாலப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் 13 ஆதிவாசி குடும்பங்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். மேலும் தெப்பக்காடு அருகே லைட்பாடி கிராமத்தில் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு ரூ.62 லட்சம் செலவில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் மழைநீர் கால்வாய், சாலை, நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story