கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம்


கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 3:49 AM GMT (Updated: 2020-06-11T09:19:18+05:30)

கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, 

கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா

இந்து கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 3 பேர் கலந்து கொண்டனர். இதேபோல, உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், வயலூர் முருகன் கோவில் ஆகியவற்றின் முன்பாகவும் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினார்கள்.

மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் கோவில் நுழைவு வாயில் முன்பு சிவசேனா கட்சி யுவசேனாவின் இளைஞரணி மாநில துணைத்தலைவர் திருமுருககணேஷ் தலைமையில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல இந்து முன்னணி சார்பில், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ்குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ராம்திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எறும்பீஸ்வரர் கோவில்

திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி இந்து முன்னனியினர் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை கடைவீதியில் இந்து அமைப்பின் ஒன்றிய நிர்வாகி துரைசாமி தலைமையிலும், சமயபுரம் சந்தைகேட் அருகே ஒன்றிய தலைவர் கந்தசாமி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு கோட்ட செயலாளர் குணசேகர் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்-மணப்பாறை

திருவானைக்கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பும் ஒற்றை காலில் நின்று இந்து முன்னணியினர், நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவரெத்தினம் தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் பிரகாஷ், கோட்ட பொதுச்செயலாளர் சிவபெருமாள், கோட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணப்பாறையில் மாரியம்மன் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

முசிறி

முசிறியில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி நிர்வாகி கந்தமணி தலைமையில், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று முசிறி அருகே வெள்ளூர் திருக்காமேஸ்வரர், முத்தையநல்லூர் செல்லாண்டிஅம்மன், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் முன்பாகவும் இந்துமுன்னணி சார்பில் நிர்வாகிகள் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.

Next Story