சாத்தூர் அருகே மாவட்ட எல்லையை கடக்க 4 கி.மீ. தூரம் நடக்கும் மக்கள் மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுமா?


சாத்தூர் அருகே மாவட்ட எல்லையை கடக்க 4 கி.மீ. தூரம் நடக்கும் மக்கள் மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 11 Jun 2020 10:16 AM IST (Updated: 11 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்ல 4 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். எனவே, நெல்லை, மதுரை மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5-வது கட்ட ஊரடங்கு தளர்வில், கடந்த 1-ந்தேதியில் இருந்து பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, நெல்லை மண்டலத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு வரையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல் மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

4 கிலோ மீட்டர் நடந்து செல்லும் பொதுமக்கள்

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்குள் வருவதற்கும், மதுரை மண்டலத்தில் இருப்பவர்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்குள் செல்வதற்கும் பஸ்கள் இல்லை. எனவே பொதுமக்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவனணைந்தபுரம் வரையிலும் பஸ்சில் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு வரையிலும் நடந்து வருகின்றனர்.

அவர்களுக்கு, அங்குள்ள சோதனைச்சாவடியில் உள்ள போலீசார், சுகாதார துறையினர் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல்வெப்ப பரிசோதனை நடத்துகின்றனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி மாவட்டத்துக்கு பஸ்சில் செல்ல அனுமதிக்கின்றனர்.

பஸ்கள் இயக்கப்படுமா?

இதனால் கோவில்பட்டி பகுதியில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வியாபாரிகள், பொதுமக்கள், மாவட்ட எல்லைகளை கடக்க 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லை, மதுரை மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story