ஊரடங்கு நேரத்திலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பல்லடம் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ஊரடங்கு நேரத்திலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பல்லடம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 11 Jun 2020 11:08 AM IST (Updated: 11 Jun 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு நேரத்திலும் பல்லடம் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு விசைத்தறி, கோழிப்பண்ணை, மருத்துவ துணிகள் தயாரிப்பு ஆகிய தொழில்கள் பிரசித்தி பெற்றதாகும். இங்கு பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிற மாநில மக்களும் ஏராளமானோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும் செல்வதற்கான பிரதான சாலையும் இது தான்.

இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக கோவை-திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது தொடர்கதையாக உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகருக்குள் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல், பஸ் நிலையம், நால் ரோடு சந்திப்பு, போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்பவர்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சாலையை அகலப்படுத்த வேண்டும்

வளர்ந்து வரும் தொழில் நகரமான பல்லடத்தில் நகர் விரிவாக்கம், உள்கட்டமைப்பு ஆகியவைகளை மேம்படுத்தி சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் வாகன விதிமீறல்களுக்கு வழக்குப்பதிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய சூழலிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story