திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் உள்பட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை


திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் உள்பட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை
x

திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் உள்பட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர், 

கொரோனா வைரசின் பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலும் பல்வேறு கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நடைமுறையில் உள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்கள் இயங்குகின்றன.

21 பேருக்கு கொரோனா பரிசோதனை

மேலும், பஸ் போக்குவரத்தும் இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இருப்பினும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருகிறவர்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சுகாதார ஆய்வாளர் உள்பட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும். அதன்படி திருப்பூருக்கு நேற்று வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா (ஸ்வாப்) பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ரத்த மாதிரி

அதன்படி திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 54 வயது பெண், காந்திநகரை சேர்ந்த 25 வயது பெண், 54 வயது பெண் மற்றும் வீரபாண்டி பிரிவை சேர்ந்த சுகாதார ஆய்வாளரான 35 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 36 வயது ஆண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், செவந்தாம்பாளையத்தை சேர்ந்த 70 வயது பெண், 11 வயது சிறுவன், 6 வயது சிறுமி, 32 வயது பெண், 50 வயது ஆண், பூலுவப்பட்டியை சேர்ந்த 50 வயது பெண் மற்றும் போயம்பாளையத்தை சேர்ந்த 18 வயது ஆண், முதலிபாளையத்தை சேர்ந்த 21 வயது ஆண், கருவம்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 37 வயது பெண், வேலம்பட்டி புதூரை சேர்ந்த 35 வயது ஆண், முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், பவானிநகரை சேர்ந்த 75 வயது ஆண் ஆகிய 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இந்த பரிசோதனை செய்துள்ளோம். விரைவில் இதற்கான முடிவுகள் தெரியவரும்.

இவர்கள் சென்னை, உத்தரபிரதேசம், கத்தார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story