ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை


ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 11 Jun 2020 11:55 AM IST (Updated: 11 Jun 2020 11:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பெருந்துறையில் மரங்கள் முறிந்து விழுந்தன.


ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. அவ்வப்போது காற்றும் வீசியது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் மழை தூறியது. பின்னர் இந்த மழை வலுத்து சுமார் 30 நிமிடம் பலத்த மழையாக கொட்டியது. இதேபோல் தாளவாடி, சூசைபுரம், மெட்டல்வாடி, ஒசூர், சிக்கள்ளி, தொட்டகாஜனூர், தலமலை, ஆசனூர் மற்றும் வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் பெருந்துறையில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பவானி ரோடு பகுதியில் ரோட்டோரம் இருந்த வேப்ப மரம், பாதாம் மரம் ஆகியவை முறிந்து கீழே விழுந்தன. அந்த நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து எதுவும் இல்லாமல் போனதால் விபத்து ஏதும் நடக்கவில்லை. சீனாபுரம், சுள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கே.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தாசரிபாளையம், டி.ஜி.புதூர், ஏளூர் மற்றும் கடம்பூர் ஆகிய பகுதிகளில் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை லேசான மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழை பெய்வதை போல மேகங்கள் திரண்டு காணப்பட்டன.

ஆனால் மழை பெய்யாமல் லேசான சாரலுடன் நின்றுவிட்டது. அதேசமயம் குளிர்ந்த காற்று வீசியது. சூளை எல்.வி.ஆர்.காலனி பகுதியில் காற்றில் ஆடிய மரத்தினால், அதன் கிளைகள் மின்ஒயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது.

மேலும், ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

Next Story