போட்டி தேர்விற்கு இணையவழி பயிற்சி வகுப்பு கலெக்டர் ரத்னா அறிக்கை
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டதில் பலர் பயனடைந்துள்ளனர்.
இந்த அலுவலகத்தில் மாணவர்கள் பயில்வதற்கு ஏற்றவகையில் அமைதியான சூழல், காற்றோட்டமான இடவசதி மற்றும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்குமான புத்தகங்களுடன் நூலகமும் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் வாயிலாக https://tam-i-l-n-a-du-c-a-r-e-e-rs-e-rv-i-ces.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டு அதில் அனைத்து போட்டித் தேர்வுகள் குறித்த பாடக்குறிப்புகள், முந்தைய தேர்வின் கேள்வித்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது சுய விவரங்களை உள்ளடு செய்து அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவர்கள் இவ்வசதியையும் வீட்டில் இருந்தவாறே பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வந்த நேரடி பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த மாதத்தில் இருந்து இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பெற்று வருகிறது.
எனவே இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது வாட்ஸ் அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் தொலைபேசி எண் 04329-228641 அல்லது செல்போன் எண் 9994171306 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகள் குறித்த விவரத்தினை அறிந்து இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில்கூறியுள்ளார்.
Related Tags :
Next Story