இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை


இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2020 4:30 AM IST (Updated: 12 Jun 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 வருடத்துக்கு முன்பு இவருடைய மனைவி இறந்துவிட்டார். தனது குழந்தைகளுடன் ரவி, வசித்து வருகிறார்.

இதற்கிடையில் திண்டிவனத்தை சேர்ந்த ரவியின் அக்கா மல்லிகாவின் மகள் திவ்யா(வயது 27) என்பவர் கடந்த 3 மாதமாக தாய் மாமா ரவி வீட்டில் தங்கி, கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார்.

மனைவி இல்லாத நிலையில் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்த ரவிக்கு திவ்யாவை 2வது திருமணம் செய்து கொடுக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இவர்களுடைய திருமணம் இன்று(வெள்ளிக்கிழமை) வீட்டிலேயே எளிய முறையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திவ்யா வீட்டின் படுக்கை அறையில் புடவையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி, கதவை உடைத்து உள்ளே சென்று திவ்யாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மாமாவை 2வது திருமணம் செய்துகொள்ள பிடிக்காமல் திவ்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story