மினிலாரியில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து 10 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு


மினிலாரியில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து   10 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது   மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2020 12:05 AM GMT (Updated: 2020-06-12T05:35:16+05:30)

மினிலாரியில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைத்து 10 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டி சின்னவாய்க்கால் வழியாக கேரளாவுக்கு மினிலாரியில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு மினிலாரி வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த லாரியை நிறுத்திய போது அதில் இருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 4 பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியில் போலீசார் சோதனையிட்ட போது வைக்கோல் கட்டுகளுக்குள் 10 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த முகமது அஸ்லம் (வயது 38), கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த அன்பரசன்(34), நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த முத்தையா(38), க.புதுப்பட்டியை சேர்ந்த சுரேந்திரன் (28) என தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கஞ்சாவை அவர்கள் கம்பத்தில் இருந்து வாங்கிக் கொண்டு கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

மேலும், தப்பி ஓடியது காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த மாயா என்ற மாயாசங்கிலி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story