கொரோனா காலத்திலும் அயராத மருத்துவ சேவை: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 1,413 பிரசவங்கள் மத்திய அரசு பாராட்டு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 1413 பிரசவங்கள் நடந்துள்ளன. கொரோனா காலத்திலும் அயராத மருத்துவ சேவையாற்றி வருவதாக மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரை,
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. இதனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.
மதுரை மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது அதிக அளவில் பிரசவம் நடந்து வருகின்றன. அதன்படி கடந்த மே மாதத்தில் மட்டும் 1,413 பிரசவங்கள் நடந்திருக்கின்றன.
இதில் 903 பிரசவங்கள் சுகப்பிரசவம், 510 பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்றிருக்கிறது. இதன்படி 64 சதவீத சுகப்பிரசவமும், 36 சதவீத அறுவை சிகிச்சையும் பதிவாகி இருக்கிறது.
கொரோனா பாதித்த கர்ப்பிணிகள்
இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 28 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 14 கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
ஒரு குழந்தை சுகப்பிரசவமாகவும், மற்ற 13 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறந்துள்ளன. இவற்றில் 5 ஆண் குழந்தைகளும், 9 பெண் குழந்தைகளும் அடங்குவர். தற்போது இந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சான்றிதழ்
கொரோனா சமயத்தில் சிறப்பாக கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக மத்திய அரசின் பாராட்டு சான்றிதழும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:-
தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் அரசு மருத்துவமனையில் பிரசவ செயல்பாடுகள் குறித்து மத்திய அரசால் ஆய்வு செய்யப்பட்டு லக்ஷயா திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சையில் 10 மகப்பேறு மருத்துவர்கள், 10 மயக்கவியல் நிபுணர்கள், பச்சிளம் குழந்தை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றி இந்த மகத்தான பணியை செய்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன்.
தனிமனித விலகல்
கர்ப்பிணிகள் கொரோனோ பாதிப்பு ஏற்படாமல் தங்களை தற்காத்து கொள்ள தனிமனித விலகலை கடைபிடிக்க வேண்டும். தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு தேவையான நேரத்தில் மட்டுமே சோதனைக்காக வரவேண்டும். அடிக்கடி வர தேவையில்லை. கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மன தைரியமும் அளிக்கிறார்கள்.
மதுரை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்த மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story