ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மதுரை ஐகோர்ட்டில் தகவல்
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த மாணவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருந்ததாவது:-
என் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது தாயார் விவசாய கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். நான் திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். கடந்த 12.9.2014 அன்று திருமங்கலம் டவுன் பகுதியில் நடந்து சென்றேன்.
அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென என்னுடைய முகத்தில் ஆசிட் வீசினார். இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்தேன். அதே நேரம் என்னுடன் வந்த, எங்கள் ஊரைச்சேர்ந்த அங்காளஈஸ்வரியும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தார். இதற்காக நான் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் என்னுடைய வலது கண் பார்வை பறிபோனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக உரிய இழப்பீடு கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த பலனும் இல்லை. எனவே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட எனக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கு குறித்து ஏற்கனவே பதில் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தீபா, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கை விசாரித்தார். அவர், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கடந்த டிசம்பர் மாதமே உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த தொகையை இதுபோல பாதிக்கப்பட்டவர்களின் மாநில அமைப்பு தான் வழங்க வேண்டும். அதில் காலதாமதம் ஆனது. இந்தநிலையில் மனுதாரரின் வங்கிக்கணக்கில் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தை இன்று காலை(அதாவது நேற்று) செலுத்தப்பட்டுவிட்டது என்றார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆர்.உதயகுமார் ஆஜராகி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை குறைவு. இதனால் இந்த தொகையை அதிகரித்து வழங்கக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். அதற்கு அனுமதி வழங்கியும், சார்பு நீதிபதி தெரிவித்த தகவலை பதிவு செய்து கொண்டும், இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story