ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி டிப்பர் லாரி மோதியது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே   மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி   டிப்பர் லாரி மோதியது
x
தினத்தந்தி 12 Jun 2020 1:14 AM GMT (Updated: 2020-06-12T06:44:00+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர், டிப்பர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் சாலமன் வேதமணி. இவருடைய மகன் பிரதீஸ் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னை தலைமை செயலகத்தில் ரோவிங் யூனிட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்ததால் பணிக்கு செல்வதற்காக நேற்று இவர் வீரகேரளம் புதூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் மதுரையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டி அருகே வந்த போது எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பிரதீஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சப்-இன்ஸ்பெக்டர் பலி

இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று பிரதீசின் உடலை பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் ஞானகுருவை (41) கைது செய்தனர். விபத்தில் பலியான பிரதீஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story