திருத்தியமைக்கப்பட்ட பயிர்க்காப்பீடு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம்- கலெக்டர் கோவிந்தராவ் பேச்சு
திருத்தியமைக்கப்பட்ட பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம் என கலெக்டர் கோவிந்தராவ் பேசினார்.
தஞ்சாவூர்,
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டம் வேளாண்மைத்துறை சார்பில் இந்த குறுவை பருவம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடன் பெறும் விவசாயிகள் விருப்ப கடிதம் அளித்து விருப்பத்தின்பேரில் வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் முன்மொழிவு படிவம் அளித்து பயிருக்கான பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து ஒவ்வொரு வட்டாரத்திலும் அப்பகுதியில் உள்ள வங்கியாளர்கள் மற்றும் பொது சேவை மைய நிர்வாகிகளுக்கு குறைந்தபட்சம் 2 பயிற்சி அளிக்க வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்திற்கான இலக்கு அனைத்து வட்டாரங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும்.
திருத்தியமைக்கப்பட்ட பயிர்க்காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கருத்துக்கள் சம்பா பருவத்தில் இத்திட்டம் செயல்படுத்தவதற்கு முன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க குறுவைநெல், மக்காச்சோளம், நிலக்கடலை, எள், வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், துணை இயக்குனர்கள் ஈஸ்வர், கோமதிதங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story