கீழடி அருகே அகழாய்வு பணி: மண் பானைகள் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வில் மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழடியில் தொழிற்சாலை நிறைந்த பகுதியாகவும், கொந்தகையில் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், அகரம் மற்றும் மணலூர் பகுதியில் பழங்கால மக்கள் வசிப்பிட பகுதியாக இருந்ததாகவும் அங்கு கிடைக்கும் சுவடுகள் மூலம் தெரிய வருகிறது.
நேற்று நடந்த அகழாய்வில் மணலூரில் மண் திட்டு பகுதியும், அகரத்தில் கவிழ்ந்த நிலையில் சிறிய பானையும், அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானையும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:-
அகரம் பகுதியில் சங்கு வளையல்கள், பாசிகள் மற்றும் மணிகள் கிடைத்துள்ளன. கீழடி போல் அகரம், மணலூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி செய்தால் முன்னோர்கள் வசிப்பிடம் இருந்த கட்டிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் கொந்தகை பகுதியில் ஆராய்ச்சி பணிகள் நடைபெறும் இடத்திற்கு எதிரே தனியார் நிலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story