வலங்கைமான் அருகே, வெட்டாற்றில் ரூ.18½ லட்சத்தில் தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு


வலங்கைமான் அருகே, வெட்டாற்றில் ரூ.18½ லட்சத்தில் தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2020 8:02 AM IST (Updated: 12 Jun 2020 8:02 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே வெட்டாற்றில் ரூ.18½ லட்சத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள வெட்டாற்றில் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் தூர்வாருதல் மற்றும் மண் திட்டுக்களை சமன்படுத்தும் பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகள், விலையில்லாமல் வண்டல்மண் வழங்கும் பணிகள்நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க உள்ளார். 17-ந் தேதி கல்லணையில் நீர் திறப்பதற்கு முன்னதாக அனைத்து இடங்களிலும் தூர்வாரும் பணிகளை முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 80 சதவீத அளவில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் நிறைவு பெறும். பொதுபணித்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பணிகளின் தூரம் மொத்தம் 1,244 கி.மீ. இதில் இதுவரை 910 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் முதல் 55 கி.மீ தூரம் வரை தூர்வாரும் பணிகள் நடப்பதற்காக கூடுதல் எந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 482 குளங்கள் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 115 குளங்களில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மூலம் வட்டியில்லா கடன் வரை அனைத்தும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சிறப்பு அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், தமிழ்ச்செல்வன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, உதவி செயற்பொறியாளர்கள் அய்யம்பெருமாள், இளங்கோ, வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story