திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயிலில் 743 தொழிலாளர்கள் பயணம்
திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயிலில் 743 தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 6 லட்சம் பேர் ஆவார்கள். வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ஆவார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
743 தொழிலாளர்கள்
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து அசாம், மிசோரமிற்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
இதில் திருப்பூரில் இருந்து 743 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். அசாமை சேர்ந்தவர்கள் 695 பேரும் மற்றும் மிசோரமை சேர்ந்த 48 தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். முன்னதாக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story