லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் புவனகிரி அருகே பரபரப்பு


லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் புவனகிரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2020 9:30 AM IST (Updated: 12 Jun 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே ஏரியை தூர்வாரும் போது லஞ்சம் வழங்கியதாக கூறியதால் பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி, 

புவனகிரி அருகே சொக்கன்கொல்லை கிராமத்தில் பெரியமடு ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் கிடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து என்.எல்.சி. பொதுப்பணித்துறை நிர்வாகம் ஏரியை தூர்வாரி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் டெண்டர் விட்டு, ஏரியை தூர்வாரியதாக தெரிகிறது. ஆனால் இந்த ஏரி முறையாக தூர்வாரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையே பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் அருளரசன், என்.எல்.சி. அதிகாரி மணிகண்டன், ஒப்பந்ததாரர் இருதயராஜ் ஆகியோர் பணி நடைபெற்ற பெரியமடு ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள், ஏரியை முறையாக தூர்வாரவில்லை என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து அதிகாரிகள், ஏன் தூர்வாரும் பணிகள் தரமற்றதாக உள்ளது என கேட்டு ஒப்பந்ததாரர் இருதயராஜை கண்டித்ததாக தெரிகிறது.

பரபரப்பு

அப்போது அவர், சொக்கன்கொல்லை பகுதி மக்கள் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி உள்ளனர். அதனால் என்னால் ஏரியை தூர்வாரும் பணியை முறையாக செய்ய முடியவில்லை என கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒப்பந்ததாரர் இருதயராஜை தாக்க முயன்றனர். உடனே அதிகாரிகள், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story