பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர வேண்டும்   கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Jun 2020 4:07 AM GMT (Updated: 2020-06-12T09:37:07+05:30)

கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர், 

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், நடப்பு ஆண்டில், தமிழ்நாட்டில் கார், குறுவை, சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இதன்படி நடப்பாண்டில் கடலூர் மாவட்டத்தில் 517 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

சேர்ந்து கொள்ளலாம்

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இதன்படி கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி ஆகும். இதர காரீப் பருவ பயிர்களான உளுந்து, மணிலா கிராம அளவிலும், கம்பு, எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 16-ந்தேதி ஆகும்.

கட்டணம்

ஆகவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் காப்பீட்டுத்தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.626, உளுந்துக்கு ரூ.331, மணிலாவுக்கு ரூ.525, கம்புக்கு ரூ.122, எள் ரூ.156-ம் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பிறகு, அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story