ஆத்தூரில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை


ஆத்தூரில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2020 10:29 AM IST (Updated: 12 Jun 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கரம் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை குமணன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவர் மீது ஆத்தூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர் கஞ்சா மற்றும் மதுபோதையில் தினமும் பலரிடம் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், ஹரிஹரசுதன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் தனது அண்ணனான செல்வம் என்பவரை, மகன் ஹரிஹரசுதனுடன் சேர்ந்து தாக்கி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கடந்த வாரம் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஆத்தூர் புதுப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே செந்தில்குமார் தனது நண்பர்கள் சிலருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென்று உருட்டுக்கட்டையால் அவரை தாக்கினார்கள். பின்னர் அவர்கள் நடுரோட்டிலேயே செந்தில்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். தொடர்ந்து அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய செந்தில்குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் ஆத்தூரில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story