தேன்கனிக்கோட்டை அருகே, 3 விவசாயிகளை கொன்ற யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது - சத்தியமங்கலம் காட்டில் விடப்படுகிறது
தேன்கனிக்கோட்டை அருகே 3 விவசாயிகளை கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறையினர் அந்த யானையை சத்தியமங்கலம் காட்டில் விட முடிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுகின்றன. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் திம்மசந்திரம், ஜார்கலட்டி, கலகோபசந்திரம், மேக்லகவுனூர் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று கடும் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்து வந்தது.
அந்த யானை கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தியது. இந்த காட்டுயானை கடந்த மாதம் பாலதொட்டணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி திம்மராயப்பா என்பவரையும், அடுத்து சின்னபூத்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சென்னப்பா என்பவரையும் தாக்கி கொன்றது. நேற்று முன்தினம் மேக்லகவுனூர் கிராமத்தில் விவசாயி சீனிவாசன் என்பவர் விளைபொருட்களை உழவர்சந்தைக்கு கொண்டு சென்றபோது இந்த யானை தாக்கியதில் அவர் இறந்தார்.
அடுத்தடுத்து 3 விவசாயிகளை தாக்கி கொன்றதால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி பிரபு, வனச்சரகர்கள் தேன்கனிக்கோட்டை சுகுமார், ஓசூர் சீதாராமன், அஞ்செட்டி ரவி, ராயக்கோட்டை முருகேசன், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன், கால்நடை மருத்துவர் பிரகாஷ், கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா கால்நடை மருத்துவர் அருண்லால் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுயானையின் நடமாட்டத்தை ‘டிரோன் கேமரா’ மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திம்மசந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானையை வனத்துறையினர் 2 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். துப்பாக்கியில் பொருத்திய மயக்க ஊசியை கொண்டு முதல் ஊசியை செலுத்தினார்கள். இதில் யானை மயக்கமடைந்து அப்படியே நின்றது. இதைத்தொடர்ந்து 2-வது ஊசியை செலுத்தினார்கள்.
பின்னர் காட்டுயானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. அதன்பிறகு கயிறுகளை கட்டி யானையை அழைத்து வந்து, வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் கிரேன் மூலம் ஏற்றினார்கள். இதையடுத்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். இந்த யானையை சத்தியமங்கலம் காட்டில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story