அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
பெரம்பலூரில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரைபோலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாண்டி (எ) வல்லத்தரசு(வயது 27). அ.ம.மு.க. பெரம்பலூர் நகர மாணவரணி செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2-ந் தேதி தனது நண்பர் சூர்யாவுடன்(25) பெரம்பலூர்- விளாமுத்தூர் சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது, வல்லத்தரசுவை சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதில் சூர்யாவையும் அந்த கோஷ்டியினர் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்தகாயம் அடைந்த சூர்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக சூர்யா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் பிரகாஷ்(24), செல்வக்குமார் மகன் விஜயராஜ்(30), ரெங்கசாமி மகன் ராஜா(34), கார்த்திக்(30) ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4-ந் தேதி சரண் அடைந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
அதனை தொடர்ந்து வல்லத்தரசு கொலை வழக்கில் முருகேசன் மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 4 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்பு 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்திரவிட்டார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட வல்லத்தரசுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தினால் வல்லத்தரசு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. இன்று மாலை 4 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
Related Tags :
Next Story