அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர்கள் பச்சமுத்து(வயது 67), ஆறுமுகம்(64), நடராஜன்(62). இவர்களது இடத்தில் உள்ள ஒரு கூரை வீட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வங்காரத்தை சேர்ந்த காத்தப்பெருமாள்(59) என்பவர் குடியேறியுள்ளார். நாளடைவில், காத்தப்பெருமாள் அந்த கூரைவீட்டை பழுது நீக்கி சற்று பெரிய வீடாக கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய சொல்லி இடத்தின் உரிமையாளர்களான பச்சமுத்து, ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனவே இந்த இடம் எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி காத்தப்பெருமாள் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
இதனிடையே கடந்த 6-ந் தேதி தளவாய் போலீஸ் நிலையத்தில் இடத்தின் உரிமையாளர்கள் புகார் கொடுத்ததுடன், நேற்று காலை வீட்டை பிரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காத்தப்பெருமாள் தனது மனைவி அஞ்சலை மற்றும் வாய்பேசமுடியாத மகள் திரிபுரசுந்தரி(வயது 14) ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனே அருகில் இருந்தவர்கள், அவர்கள் 3 பேரையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை அரியலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story