சேலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: ரூ.441 கோடியில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சேலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: ரூ.441 கோடியில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2020 6:15 AM GMT (Updated: 12 Jun 2020 6:15 AM GMT)

சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம், 
சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

சேலம் 5 ரோட்டை மையமாக கொண்டு ரூ.441 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 7.87 கிலோ மீட்டர் நீளத்துக்கு 173 ராட்சத தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலமானது, தமிழகத்தில் மிக நீளமான மேம்பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையில் 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குரங்குச்சாவடியில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையில் 5 கிலோ மீட்டர் தூரம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதேபோல், லீபஜார்-செவ்வாய்பேட்டை இடையே ரூ.42.14 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரூ.441 கோடியில் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் லீபஜார்-செவ்வாய்பேட்டை இடையே அமைக்கப்பட்ட லீபஜார் ரெயில்வே மேம்பாலம் என மொத்தம் ரூ.483.14 கோடியில் 2 புதிய மேம்பாலங்கள் திறப்பு விழா குரங்குச்சாவடியில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் லீபஜார் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து அவர், புதிய ஈரடுக்கு மேம்பாலத்தில் பஸ்கள் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து புதிய மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்று பார்வையிட்டார்.

முன்னதாக பல்வேறு துறைகள் மூலம் ரூ.286 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.26.22 கோடியில் முடிவுற்ற 47 திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில், நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் சேலம் மாநகரில் வசிக்கும் மக்கள் நகரத்திற்குள் செல்கிறபோது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் முக்கிய சாலைகள் சந்திப்பில் உயர்மட்ட பாலமும், ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் மேம்பாலமும் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இதையடுத்து அந்த கோரிக்கையின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சேலம் மாநகர மக்கள் வைத்த கோரிக்கையை எடுத்துரைத்தேன். அதாவது, இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள 5 ரோட்டை மையமாக கொண்ட ஈரடுக்கு மேம்பாலமும், அதோடு, ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஏ.வி.ஆர்.ரவுண்டானா மேம்பாலம், திருவாக்கவுண்டனூர் உயர்மட்ட மேம்பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் 2 ரெயில்வே மேம்பாலங்கள், மணல்மேடு பகுதியில் ரெயில்வே தண்டவாளம் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம், தற்போது திறக்கப்பட்டுள்ள லீபஜார்-செவ்வாய்பேட்டை இடையே ரெயில்வே மேம்பாலம் ஆகியவை எல்லாம் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனுவாக அளித்தேன்.

சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக இருக்க வேண்டும் என்றால் உயர்மட்ட மேம்பாலமும், ரெயில்வே மேம்பாலமும் அமைத்து தர வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் உடனே கோரிக்கை மனுவை பார்த்துவிட்டு, இன்னும் ஏதாவது இருக்கிறதா? இவ்வளவு தான் பாலமா? என்று கேட்டார்.

அதற்கு நான், சேலம் பிரதான சாலையாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலம் வளர்ந்து வரும் நகரமாக இருப்பதாலும் இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், உடனடியாக நான் குறிப்பிட்ட மேம்பாலங்களை கட்டுவதற்கு அனுமதி அளித்து அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.

ஏற்கனவே, ஏ.வி.ஆர்.ரவுண்டானா மேம்பாலம் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம், இரும்பாலை பிரிவு ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் ஆகியவையும் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தற்போது மண்ணில் இருந்து மறைந்தாலும், அவர் அறிவித்த திட்டம் இன்று நமக்கு கண்முன் காட்சி அளித்து கொண்டிருக்கிறது. அவரது அறிவிப்பால் உருவாக்கப்பட்ட இந்த 5 ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதோடு, பல்வேறு பாலங்கள் வேண்டும் என்று சேலம் மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி கந்தம்பட்டி பகுதி சந்திப்பில் இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது விபத்து ஏற்படுவதாகவும், இதனால் அதிகமாக உயிர்பலி ஏற்படுவதாகவும், எனவே கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அங்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலம் முடியும் தருவாயில் உள்ளன.

அதேபோல், அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலமும், முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டி, ஜெ.எஸ்.டபிள்யூ தொழிற்சாலை அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலமும் அமைக்க பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

சேலம் சீலநாயக்கன்பட்டி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சர்வீஸ் சாலை, மாமாங்கம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம், அதேபோல், ஆத்தூர் செல்லியம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு ஒரு உயர்மட்ட மேம்பாலம், ஆத்தூரில் ரெயில்வே மேம்பாலம், வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகளவு பாலங்களே கிடையாது. இதற்கு முன்பு சேலத்தில் சீலநாயக்கன்பட்டி மற்றும் அரசு ஆஸ்பத்திரி பகுதிகளில் மட்டும் தான் 2 பாலங்கள் இருந்தன. நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்தனையும் விபத்தை குறைப்பதற்காகவும், மக்கள் எளிதாக சாலை வழியாக பயணம் மேற்கொள்ளவும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு மேம்பாலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஒரு போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 16 கண் பாலம் அருகே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், கிராமப்புற சாலையின் திட்டத்தின் கீழ் நதி மற்றும் ஓடையின் குறுக்கே பல்வேறு பாலங்கள் கட்டி மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் இன்றைய தினம் 5 ரோடு மையமாக கொண்டு ரூ.441 கோடியில் ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 7.87 கி.மீட்டர் ஆகும். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் கட்டியிருப்பது சேலம் மாநகரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக நடந்த மேம்பாலம் திறப்பு விழாவில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், செம்மலை, வெற்றிவேல், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story