தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - உதவி ஆணையர் தகவல்
தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம், பொறுப்பு) சு.சுடலைராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை,
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பின்வரும் புதிய நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த 78-வது வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெறும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன்பெறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரையிலும் ரூ.1,000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் ரூ.2 ஆயிரமும், 9, 10-ம் வகுப்பு பயிலும்போது ரூ.3 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விளையாட்டு திறன் மிக்க தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மாவட்ட அளவிலான உள்விளையாட்டு, வெளி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் தொழிலாளியின் பிள்ளைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரமும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மாதிரி வினாத்தாள், பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட புதிய நலத்திட்டங்களில் (ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் தவிர) பயனடைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Related Tags :
Next Story