கொரோனா தொற்று அபாயம்: கியாஸ் சிலிண்டர் வாங்க வாட்ஸ்-அப்பில் முன்பதிவு செய்யும் வசதி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்
கியாஸ் சிலிண்டர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்து ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி கோவையில் அறிமுகமாகி உள்ளது.
கோவை,
கியாஸ் சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தற்போது கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர் வந்தவுடன் அதற்கான பணத்தை சிலிண்டர் கொண்டு வரும் கியாஸ் ஏஜென்சி நபரிடம் கொடுத்து பெற்று வருகின்றனர்.
இதில் முன்பதிவு செய்யும்போது லைன் கிடைக்க காலதாமதம் ஆகிறது. மேலும் அதில் கேட்கும் கேள்விகளுக்கு 1, 2 என டைப் செய்து முன்பதிவு செய்வதில் சில சிரமங்கள் உள்ளன.
வாட்ஸ்-அப்பில் முன்பதிவு
இதை தவிர்க்கும் பொருட்டும், கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலிலும் பாரத் கேஸ் நிறுவனம் கடந்த வாரம் வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்கள் எளிதாக கியாஸ் முன்பதிவு செய்யும் வசதியை தொடங்கி உள்ளனர். மேலும் இதில் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தும் வசதியையும் இணைத்து உள்ளனர். இதன் காரணமாக நடைமுறையில் பணத்தை கொடுத்து வாங்கும் முறை தவிர்க்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் செலுத்துவதால் தொற்று நோய் பரவலும் தடுக்கப்படுகிறது.
இதற்காக பாரத் பெட்ரோலியத்தின் ஸ்மார்ட் லைன் நம்பரான 1800 223 344 என்ற எண்ணை கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்துள்ள மொபைலில் பதிவுசெய்து , “ஹாய் அல்லது ஹலோ “ என்று அனுப்பவேண்டும். உடனடியாக ஸ்மார்ட் ஹாட்லைன் நம்பரில் இருந்து பதில் தகவல் பெருவீர்கள்.
நேரில் பணம் செலுத்துவதை தவிர்க்கலாம்
தொடர்ந்து கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய 1 அல்லது புக்கிங் என வாட்ஸ்-அப் மூலம் அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் போதும் உடனடியாக சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு அதற்கான மெசேஜ் வரும். தொடர்ந்து அதில் ஆன்லைன் மூலம் தொகை செலுத்த லிங்க் அனுப்பப்படும். அதில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்வதால் ஏற்படும் கால தாமதம் மற்றும் நேரில் பணபரிமாற்றம் தவிர்க்கப்படுகிறது.
இதற்காக கியாஸ் ஏஜென்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று இதனை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கியும் கியாஸ் அடுப்பில் வாட்ஸ்-அப் முன்பதிவு செய்யும் முறை குறித்த ஸ்டிக்கர் ஒட்டியும் வருகின்றனர். பயன்படுத்த எளிதாக உள்ள இந்த வாட்ஸ்-அப் முன்பதிவு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Related Tags :
Next Story