ஊரடங்கால் விற்பனை குறைந்தது: பறிக்காமல் மரங்களிலேயே விடப்பட்டுள்ள பலாப்பழங்கள்

ஊரடங்கால் விற்பனை குறைந்ததால் பறிக்காமல் மரங்களிலேயே பலாப்பழங்கள் விடப்பட்டு உள்ளன.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை, மாமரம், செம்மனாரை, வாகப்பனை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் பலாப்பழங்களை பறித்து, விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். அதன்படி தற்போது சீசன் நேரம் என்பதால் மரங்களில் அதிகளவில் பலாப்பழங்கள் பழுத்து தொங்குகின்றன.
ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை இல்லை. இதனால் விற்பனையும் குறைந்து உள்ளது. மேலும் பழங்குடியின மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விற்பனை குறைந்தது
கடந்த காலங்களில் விவசாயிகள் தங்களது பலா மரங்களில் பழுத்து உள்ள பழங்களை குத்தகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். ஒருசிலர் பழங்களை வாங்கி சாலையோரத்தில் கடைகளை அமைத்தும், பலாச்சுளைகளை பிரித்து பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்து வந்தார்கள். அந்த சுவை மிகுந்த பலாப்பழங்களை சுற்றுலா பயணிகளும் விரும்பி வாங்கினர்.
இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் பஸ்களின் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாலும், பஸ்களில் குறைந்த பயணிகள் மட்டும் பயணித்து வருகின்றனர். இதனால் விற்பனை குறைந்து உள்ளது. இதனால் பலாப்பழங்களை பறிக்காமல் விவசாயிகள் மரங்களில் அப்படியே விட்டு உள்ளனர்.
நஷ்டம்
சமவெளிப்பகுதியில் இருந்து பலாப்பழங்களை தின்பதற்காக வந்த காட்டுயானைகள் முகாமிட்டு விவசாயிகள் மரங்களில் பறிக்கப்படாமல் விட்ட பழங்களை தின்று விட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டுதோறும் கோடை சீசனில் பலாப்பழ வியாபாரம் சூடுபிடிக்கும். ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வரவில்லை. ஊரடங்கு தளர்விற்கு பின் இயக்கப்படும் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. இதனால் பலாப்பழங்களை பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் தடைபட்டு, நஷ்டம் அடைந்து உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story