கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2020 5:24 AM IST (Updated: 13 Jun 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரு,

கன்னடம், கலாசாரம், சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அத்துறை மந்திரி சி.டி.ரவி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், ஊரடங்கு காலத்தில் 16 ஆயிரத்து 95 கலைஞர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.3.21 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

“கர்நாடகத்தில் 20 சுற்றுலா தலங்களை மேம்படுத்த ஒரு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த தலங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இதை செயல்படுத்த அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த துறையை நம்பியுள்ள 3 லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் அபாயத்தில் உள்ளது. இந்த சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை தடுக்க சுற்றுலாத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் கர்நாடகத்தில் சிக்கிய வெளிநாட்டினர் 6,780 பேர் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அதிகாரிகள் பேசும்போது, கடந்த ஆண்டு கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கழகம் ரூ.6.23 கோடியும், ஜங்கல் லாட்ஜஸ் அதாவது வனப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மூலம் ரூ.7.86 கோடியும் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Next Story