தட்சிண கன்னடாவில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வினியோகம் மாவட்ட கல்வித்துறை அதிகாரி தகவல்


தட்சிண கன்னடாவில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வினியோகம் மாவட்ட கல்வித்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2020 5:37 AM IST (Updated: 13 Jun 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மங்களூரு,

கர்நாடகத்தில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் இந்த சவாலான சூழ்நிலையில் மாநில அரசு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மந்திரி சுரேஷ்குமார், ஒவ்வொரு கல்வி மாவட்டமாக சென்று அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு இந்த தேர்வை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்தாலும், கர்நாடகத்தில் தேர்வை ரத்து செய்யமாட்டோம் என்றும் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து அந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மாநில அரசு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துகிறது. இது மிகவும் சவாலானதாகும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 30,835 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர். இதற்காக 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் தலா 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவர்களின் உடல் நிலை பரிசோதனை செய்யப்படும். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அறையிலும் சுகாதாரத்துறையினர் ஊழியர் நியமிக்கப்படுவார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் ‘ஹால் டிக்கெட்’ வினியோகம் செய்யப்படும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கே சென்று ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு 65 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு மாணவருக்கு தலா 2 முக கவசங்கள் என்ற விகிதத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முக கவசங்கள் ஹால் டிக்கெட் வினியோகம் செய்யும்போது அதனுடன் சேர்த்து வழங்கப்படும்.

பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும். பஸ்கள் செல்ல முடியாத கிராமங்களுக்கு தனியார் வாகனங்கள் இயக்கப்படும். இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் பயண விவரம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் 345 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்கள். அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பது தொடர்பாக இரு மாவட்ட நிர்வாகங்கள் (தட்சிண கன்னடா-காசர்கோடு) இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கேரளாவில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story