சூளகிரி அருகே காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்


சூளகிரி அருகே காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 13 Jun 2020 3:15 AM IST (Updated: 13 Jun 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ஆண் யானை ஒன்று, தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சூளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட செட்டிப்பள்ளி காப்புக்காட்டிற்கு சென்றது. அது தற்போது குண்டுகுறுக்கி வனப்பகுதியில் தனியாக முகாமிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, நல்லகானகொத்தப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் திரும்பிய யானை நேற்று காலை 6 மணிக்கு, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்த விவசாயி வெங்கடசாமி (வயது 42) என்பவரை தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் விவசாயி வெங்கடசாமி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சூளகிரி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு வனத்துறையினரை எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

Next Story