கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்


கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்  அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2020 8:43 AM IST (Updated: 13 Jun 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி 30 பேருக்கு ரூ.58 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர ஸ்கூட்டர்களையும், 5 பேருக்கு தையல் எந்திரங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 கால்களும் பாதிக்கப்பட்டு, நன்கு செயல்படும் கைகளையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி பயில்பவர், வேலைக்கு செல்பவர்கள், சுயதொழில் புரிபவர்களுக்கு உதவிடும் வகையில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தேர்வு குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விலையில்லா 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

தையல் எந்திரம்

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கும் ஆண்டுதோறும் தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக இன்று (அதாவது நேற்று) 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story