திருப்பூர் மாவட்டத்தில், 40 நாட்களுக்கு பிறகு நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது


திருப்பூர் மாவட்டத்தில், 40 நாட்களுக்கு பிறகு   நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 13 Jun 2020 10:05 AM IST (Updated: 13 Jun 2020 10:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பிறகு நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள். இதைத்தொடர்ந்து 114 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நர்சிங் மாணவி

இதன் பின்னர் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. தொடர்ந்து பல்வேறு தளர்வுகளும் திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கி வந்தது. பனியன் நிறுவனங்களும் இயங்க தொடங்கின. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவி கடந்த மே மாதம் 25-ந்தேதி மூலனூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்து தங்கினார். தொடர்ந்து அங்கு 10 நாட்கள் குடும்பத்தினருடன் அவர் வசித்தார்.

கொரோனா உறுதி

இதைத்தொடர்ந்து அவரது உடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில மாற்றங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவி மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

40 நாட்களுக்கு பிறகு...

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியும் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 2-ந்தேதி இடுவாய் பகுதியை சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண் ஆகிய 2 டிரைவர்கள் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு சென்று லாரியில் தர்பூசணி லோடு ஏற்றி வந்தவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்தது.

இதன் பின்னர் கடந்த 40 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு உள்ள அந்த பகுதியில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவியுடன் தங்கியிருந்த அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

Next Story