டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து 16-ந் தேதி தண்ணீர் திறப்பு - கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து 16-ந் தேதி தண்ணீர் திறப்பு - கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2020 3:30 AM IST (Updated: 13 Jun 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கோவிலூர் அருகே அரசமரத்தடி கால்வாயில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைமடை பகுதி வரை இந்த ஆண்டு தண்ணீர் கொண்டு செல்ல குடிமராமத்து பணி மற்றும் தூர்வாரும் பணி மிக சிறப்பாக முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்றைக்கு(அதாவது நேற்று) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்க திட்டமிட்டு வருகிறோம்.

எந்தெந்த பகுதிகளில் வாய்க்கால்கள், குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் அளித்த மனுக்களின் அடிப்படையில் பணி நடந்து வருகிறது.

பொதுப்பணித்துறையின் சார்பில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 165 பணிகள் ரூ.23 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 109 பணிகள் ரூ.35 கோடியில் நடந்து வருகிறது. தண்ணீர் அந்தந்த பகுதிகளுக்கு வருவதற்குள் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரையில் 80 சதவீத பணிகளை முடித்து விட்டோம். வாய்க்கால்களில் 647 கிலோ மீட்டர் தொலைவுக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 608 குளங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தபபட்டு வருகிறது.

கரைகளில் மரக்கன்றுகள் நடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களில் தண்ணீர் சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கால்நடைகளுக்கு கூட மிக உதவியாக இருக்கும். குறுவை சாகுபடியை நல்ல முறையில் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல மகசூல் பெற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், புதூரில் ரூ.1 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்படுவதையும், கண்ணந்தங்குடி கிழக்கு பகுதியில் ரூ.1 லட்சத்தில் குளம் தூர்வாரப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story